×

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறைந்தது எதனால்? * தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் பெற ஏற்பாடு * உடனடி தேர்வுக்கு மாணவர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, மே 8: திருவண்ணாமலை மாவட்டத்தில், தேர்ச்சி சதவீதம் குறைவுக்கான காரணங்கள் குறித்து தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. மாநில அளவில் 94.56 சதவீதம் மாணவர்ள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பெரும்பாலான மாவட்டங்கள் அதிகபட்ச அளவில் தேர்ச்சி சதவீதத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 26,551 பேரில், 24,021 பேர் தேர்ச்சி பெற்றனர். மேலும், 2530 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. திருவண்ணாமலை மாவட்டம் 90.47 சதவீத தேர்ச்சியை பெற்றபோதும், மாநில அளவில் கடைசி இடத்தை பெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஊரகப் பகுதிகளை அதிகம் கொண்டிருக்கிறது. கிராமப்புற ஏழை மாணவர்கள் நிறைந்த மாவட்டம். எனவே, இம்மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெறாத மாணவர்கள், படிப்பை கைவிட்டு வேலை தேடி செல்வதை தவிர்க்க, தேர்ச்சி பெறாத மாணவர்கள் உடனடி தேர்வுக்கு தயார்படுத்தும் பணியில் மாவட்ட கல்வித்துறை தனி கவனம் செலுத்த வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அதோடு, எந்தெந்த பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்திருக்கிறது, எந்தெந்த பாடங்களில் தேர்ச்சி குறைந்திருக்கிறது, அதற்கான காரணம் என்ன என்பது போன்ற விரிவான விளக்கங்களை, சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களிடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாவட்டம் முழுவதம் உள்ள 258 பள்ளிகளில், 20 பள்ளிகள் 75 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சியை பெற்றிருக்கிறது. மேலும், ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 48 சதவீத தேர்ச்சியை பெற்று, மாவட்டத்தில் கடைசி இடத்தை அடைந்துள்ளன. எனவே, 75 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி பெற்றுள்ள பள்ளிகளில், தேர்ச்சி குறைவுக்கு காரணம் என்ன என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளன.

அதன் அடிப்படையில், வரும் கல்வி ஆண்டில் சம்மந்தப்பட்ட பள்ளிகள் மீது தனி கவனம் செலுத்தவும், தேர்ச்சி குறைந்த பாடங்களுக்கு கூடுதல் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், ஆசிரியர் காலிப்பணியிடம் இருந்தால், கல்வி ஆண்டில் தொடக்கத்திலேயே பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தொகுப்பு ஊதியத்தில் ஆசிரியரை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்ச்சி குறைவுக்கான காரணங்களை அறியும் அறிக்கைகள், பள்ளிகளிடம் இருந்து பெறும் பணி முடிந்ததும், இம்மாத இறுதியில் பள்ளி தலைமை ஆசிரியர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திட்டமிட்டுள்ளார். அப்போது, வரும் கல்வி ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தின் தேர்ச்சியை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.

The post பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறைந்தது எதனால்? * தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் பெற ஏற்பாடு * உடனடி தேர்வுக்கு மாணவர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai district ,Thiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் நீரின்றி...